சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-
ஏழு பேர் விடுதலை விஷயத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை திமுக பரப்பி வருகிறது. 2018 ஆம் ஆண்டு 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி அமைச்சரவை நிராகரித்தது. மூவரின் தண்டனையை குறைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக தீர்மானத்தினை எதிர்த்து அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தான் ஏழு பேர் விடுதலை பாதிக்கப்பட்டது.
இவர்களின் விடுதலை குறித்து திமுக அரசியல் நாடகம் நடத்தி வருகின்றது. நான் ஆளுநரை சந்திக்கும்போதெல்லாம் ஏழு பேர் விடுதலை குறித்து வலியுறுத்துகிறேன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி கூறினார்.