தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களம் காண்கிறார் . ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆதரித்து ஓபிஎஸ் பிரச்சாரம் செய்த நிலையில் நேற்று ஓபிஎஸ்சை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி போடியில் பிரச்சாரம் மேற்கொண்டார் .
போடி தேவர் சிலை அருகே திறந்த வேனில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் ஒன்றாக நின்று பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தை முடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி போடி சுப்புராஜ் நகர் பகுதியில் உள்ள துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றார். அங்கு தேநீர் விருந்தில் கலந்துகொண்ட அவர் ஓபிஎஸ் அம்மா பழனியம்மாளிடம் ஆசி பெற்றார். பின்னர் ஓபிஎஸ் குடும்பத்துடன் சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஓபிஎஸ் இளையமகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் , ‘எனது அப்பத்தா பாசத்திற்குரிய ஓ.பழனியம்மாள் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரை வாழ்த்தி ஆசீர்வாதங்களை வழங்கினார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
