மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவிக்கொண்டிருக்க இந்தியாவிலோ இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவிவருகிறது என மத்திய சுகாதாரத் துறை ஷாக் தகவல்களைக் கூறியுள்ளது. இந்த புதிய உருமாற்ற வைரஸ் குறைந்தது 18 மாநிலங்களில் பரவியிருக்கலாம் என்பதை அணுமானமாகக் கூறுகிறது. முக்கியமாக மற்றொரு விஷயத்தையும் மத்திய அரசு தெரிவித்தது.
அந்தந்த மாநிலங்களில் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்துவதை அம்மாநில அரசுகளே பரிசீலிக்க அனுமதியளிப்பதாகக் கூறியது. இதனால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது. மகாராஷ்டிராவில் இரவுநேர ஊரங்கு போடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. தேர்தலுக்குப் பின் ஊரடங்கு போடப்படும் என்ற யூகங்களும் சொல்லப்படுகின்றன. ஊரடங்கு குறித்து தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.