சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரணத்தை கண்டித்து, ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக, தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஆவார். தீவிரவாதிகளுடன் தொடர்பு என குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட அவர், உடல்நல குறைவால் சிறைச் சாலையில் மரணமடைந்தார்.
ஸ்டேன் சுவாமிக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையொட்டி, ஈரோடு கருங்கள்பாளையம் காந்தி சிலை அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில், பொருளாளர் முகமது யூனுஸ், மாவட்ட துணைத் தலைவர் குறிஞ்சி பாஷா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யாஹ்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மீது போலியான வழக்கு புனையப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காத ஒன்றிய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
